X

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் – பி.வி.சிந்து, பிரனோய் காலியிறுதிக்கு முன்னேற்றம்

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் இரணடு முறை பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து மற்றும் பிரனோய் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2ம் சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து அமெரிக்காவின் லாரன் லாமை 21-16 21-13 என்ற நேர்செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரனோய், சக வீரர் பிரியன்ஷு ரஜாவத்தை 21-11 16-21 21-18 என்ற செட்கணக்கில் தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார்.

காலிறுதியில் பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனை சுபனிதாவை எதிர்கொள்கிறார். பிரனோய், காலிறுதியில் பிரான்ஸ் வீரர் அர்னாட் மெர்க்லேவுடன் மோத உள்ளார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப்-மாளவிகா பன்சோட் ஆகியோர் விளையாடுகின்றனர். இதேபோல் சமியா இமாத் பரூக்கி, அனுபமா உபாத்யாயா ஆகியோரும் காலிறுதியில் மோதுகின்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொருத்தவரை மிதுன் மஞ்சுநாத்தும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். அவர் இனி ரஷிய வீரர் செர்கியுடன் மோதுகிறார். இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அர்ஜுன்-துருவ் கபிலா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.