சேலத்தில் புதிய கொரோனா தடுப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு கடுமையாக அமல்படுத்துகிறது.
அதோடு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் குறைந்துள்ள சூழ்நிலையில், அங்கு கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உருவாக்கப்படுகின்றன.
மேலும், அதற்கான மாற்று வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி, அரசு கட்டிடங்களில் கொரோனா சிகிச்சை மையங்களை அரசு உருவாக்கி வருகிறது.
மேலும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் தடுப்பூசி தயாரிப்பை மாநிலத்திலேயே செய்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். தடுப்பூசியை தயாரித்து அளிப்பதற்காக சர்வதேச அளவிலான டெண்டர்-க்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கொரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்று டிட்கோ நிறுவனத்திற்கும் அவர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று கொரோனா பரவல் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யவும், கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை கலந்தாலோசிக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
அதன்படி முதற்கட்டமாக அவர் இன்று காலை சேலம் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து சேலம் இரும்பு ஆலை வளாகத்தில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சேலத்தை தொடர்ந்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்துகிறார்.
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.