சேப்பாக்கம் மைதானத்தில் டோனிக்கு சிறப்பான வரவேற்பு
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் டோனி.
38 வயதான அவர் 2 உலக கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி முத்திரை பதித்தது.
3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த அவர் 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி அந்த போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார்.
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையோடு அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது ஓய்வை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடிவிட்டு அதோடு ஓய்வு பெற டோனி திட்டமிட்டுள்ளார்.
மார்ச் 29-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடுகிறார். இதில் அவர் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வாய்ப்பை பெறுவார்.
ஆனாலும் இந்திய அணி நிர்வாகமும், கிரிக்கெட் வாரியமும் டோனி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது.
அதே நேரத்தில் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து டோனி கழற்றிவிடப்பட்டுள்ளார். இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது.
ஆனாலும் தனது அடுத்த கட்ட நிலை குறித்து டோனி கருத்து எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.
உலக கோப்பை அரைஇறுதிக்கு பிறகு 8 மாதங்கள் அவர் எந்தப்போட்டியிலும் ஆடாமல் இருக்கிறார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் பயிற்சிக்காக டோனி வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.
நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
சிறிது தூரம் ஆடிய பிறகு உடற்பயிற்சியில் டோனி ஈடுபட்டார். பின்னர் வலை பயிற்சியிலும் ஈடுபட்டார். அப்போது வழக்கம் போல பெரிய ஷாட்களை அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
முன்னதாக மைதானத்துக்கு வந்த டோனிக்கு சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்டேடியத்தில் அவருக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் அவர் உள்ளே நுழைந்த போது டோனி, டோனி என்று கோஷமிட்டு மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
டோனியுடன் சக வீரர்கள் அம்பதிராயுடு, முரளி விஜய், பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, உள்ளூர் வீரர்கள் சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றிள்ளது. மேலும் 5 தடவை 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.