சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது வீரராக களம் இறங்கிய ஹெட்மயர் வானவேடிக்கை நிகழ்த்தினார். 26 வயதான அவர் 106 பந்துகளில் 139 ரன் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். 41-வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய அவருக்கு இது 5-வது சதமாகும்.
139 ரன் குவித்ததன் மூலம் ஹெட்மயர் புதிய சாதனை படைத்தார். வெற்றிகரமான சேசிங்கில் அதிக ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை புரிந்தார். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு ரிக்கார்டோ போவெல் 124 ரன் எடுத்து இருந்தார். இதை முறியடித்தார்.
மேலும் இந்திய மண்ணில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக ரன் எடுத்தவர்களில் 2-வது இடத்தை பிடித்தார். ஜெயசூர்யா 1997-ம் ஆண்டு 151 ரன் (அவுட் இல்லை). குவித்து முதல் இடத்தில் உள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் 139 ரன் குவித்ததன் மூலம் ஹெட்மயர் அதிக ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ள டோனியை சமன் செய்தார். டோனி 2007-ம் ஆண்டு ஆசிய லெவன் அணிக்காக சேப்பாக்கத்தில் ஆப்பிரிக்க லேவனுக்கு எதிராக 139 ரன் (அவுட் இல்லை) குவித்து இருந்தார். சயீத் அன்வர் 1997-ம் ஆண்டு 194 ரன் குவித்ததே இன்னும் சாதனையாக இருக்கிறது.