சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமருக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் டெல்லி செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் நேரில் வந்து அழைக்க முடியவில்லை என்று முதலமைச்சர் கூறினார்.