செஸ் ஒலிம்பியாட் போட்டி – ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தானுக்கு கோப்பை

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது. அந்த அணியின் நோடிர்பெக் யாகுபோவ், ஜாவோகிர் சிந்தாரோவ், ஷம்சிடின் வோகிடோவ் மற்றும் ஜஹோங்கிர் வாகிடோவ் ஆகியோர் தங்கம் வென்றனர்.

2வது இடம் பிடித்த அர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அந்த அணியின் சர்கிசியன் கேப்ரியல், மெல்குமியன் ஹ்ரான்ட், பெட்ரோசியன் மானுவல் மற்றும் ஹோவன்னிசியன் ராபர்ட் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். இந்திய பி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த அணியின் குகேஷ், சரின் நிகல், பிரக்ஞானந்தா மற்றும் சத்வானி ரவுனக் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

மகளிர் பிரிவு உக்ரைன் அணியின் முசிச்சுக் மரியா, முசிச்சுக் அன்னா, உஷெனினா அன்னா மற்றும் புக்ஸா நடாலியா ஆகியோர் தங்கம் வென்றனர். ஜார்ஜியாவின் டிசக்னிட்ஸ் நானா, பாட்சியாஷ்விலி நினோ, ஜவகிஷ்விலி லேலா, அரபிட்ஸே மேரி ஆகியோர் வெள்ளி வென்றனர்.

இந்திய மகளிர் ‘ஏ’ அணியின் கோனேரு ஹம்பி, வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் குல்கர்னி பக்தி ஆகியோர் வெண்கலம் வென்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனிநபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.

ஓபன் பிரிவி தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கப்பதக்கம் வழங்கினார். குதிரை வடிவம் கொண்ட தம்பி நினைவு பரிசையும் அவர் வழங்கி கௌரவித்தார். உஸ்பெகிஸ்தான் அணிக்கு செஸ் ஒலிம்பியாட் கோப்பை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அகார்டி டிவோர்கோவிச், அந்த அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools