செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் இன்று முதல் மாமல்லபுரம் வருகிறார்கள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் இன்று முதல் மாமல்லபுரத்துக்கு வருகின்றனர் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். மாமல்லபுரம், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது.
செஸ் விளையாட்டில் ஒலிம்பிக்காக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்பட 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
கவுரவமிக்க செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள தமிழக அரசு இந்த போட்டியை என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும் வகையிலும், செஸ் ஆட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலப்படுத்தும் நோக்கிலும் போட்டிக்கான ஏற்பாடுகளை வெகுவிமரிசையாக செய்து வருகிறது.
இந்த நிலையில் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள நவீன அரங்கம், விளையாட்டு வீரர்களுக்கு செய்யப்பட்டு இருக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- \
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறப்பினர்கள், மாவட்ட கலெக்டர்கள், சமூக அமைப்புகள், பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை என எல்லா துறைகளும் எல்லா இடத்துக்கும் பரவலாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 187 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள், 200 நடுவர்கள், சர்வதேச செஸ் கூட்டமைப்பை சேர்ந்த 400 பேர் என மொத்தம் 3,000 பேர் சென்னைக்கு வர உள்ளனர். வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் இன்று முதல் சென்னைக்கு வர இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
வெளிநாட்டு செஸ் வீரர்களுக்கு தமிழக கலாசாரம், பண்பாட்டின்படி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள 29 நட்சத்திர விடுதிகளில் 2,600 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு 47 வகையான உணவு வகைகளும் தயார் செய்யப்பட்டு உபசரிக்கப்பட இருக்கிறது.
தமிழ் கலாசாரம், பண்பாடு பற்றிய புத்தகங்களையும் வழங்க உள்ளோம். வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து அவர்களின் நாட்டிற்கு திரும்பி செல்லும் வரை 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வெளிநாட்டு வீரர்களின் உடல் நலத்தை காக்கும் பொருட்டு 198 டாக்டர்கள், 74 செவிலியர்கள், 163 பிற களப்பணியாளர்கள் என மொத்தம் 435 பேர் அடங்கிய 7 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி அமைப்பு குழு தனி அதிகாரி சங்கர், மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், மாவட்ட நில எடுப்பு பிரிவு வருவாய் அலுவலர் நாராயணன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.