X

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28-ந்தேதி நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார். 29-ந்தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. 11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்றது. ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் ஆக மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடந்தது. இந்தப் போட்டியின் முடிவில் இந்தியாவின் 2 அணிகள் வெண்கல பதக்கம் பெற்றன. ஓபன் பிரிவில் குகேஷ், நிஹல் சரின், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ஆகி யோரை கொண்ட இந்திய ‘பி’ அணி வெண்கல பதக்கம் பெற்றது. பெண்கள் பிரிவில் ஹம்பி, ஹரிகா, வைசாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் அடங்கிய இந்திய ‘ஏ’ அணி வெண்கல பதக்கம் பெற்றது. இது தவிர தனி நபர் பிரிவில் 7 இந்தியர்கள் பதக்கம் பெற்றனர்.

நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் 2 அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப்பிரிவில் ‘இந்திய பி அணியும்’ பெண்கள் பிரிவில் ‘இந்திய ஏ அணியும்’ என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ‘இந்திய பி அணிக்கும்’, பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி (பெண்கள்)’ ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி‌‌ ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மெனியா வெள்ளியும், பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜார்ஜியா வெள்ளி பதக்கமும் பெற்றன.