செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து இருக்கிறது.

இதுபற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2018-ம் ஆண்டு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தில் பனிக்கட்டியின் (மூடுபனி) மேற்பரப்பு தாழ்வதையும், உயர்வதையும் கண்டறிந்து, அதன் அடியில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம் என கூறியது. ஆனால் அதை அந்த காலகட்டத்தில் விஞ்ஞானிகள் நம்பவில்லை. அதே நேரத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர் கண்டுபிடித்த நேரத்தில், விண்கலம் அளவிட்ட விசித்திரமான ரேடார் சமிக்ஞையை அவர்கள் மூடுபனியின் கீழே உலந்த பொருள் இருக்கலாம் என கருதினர்.

ஆனால் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு செவ்வாயில் அல்டிமிஸ் ஸ்காபிலி என்றறியப்படுகிற பனிப்படலத்தால் மூடப்பட்ட பகுதியை வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்தனர். அதில்தான் அவர்கள் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு என்று கண்டறிந்தனர்.

“புதிய நிலப்பரப்பு சான்றுகள், எங்களது கம்ப்யூட்டர் மாதிரி முடிவுகள், ரேடார் தரவுகள் ஆகியவை, இப்போது செவ்வாய் கிரகத்தில் குறைந்தபட்சம் ஒரு பகுதியான திரவ நீர் இருப்பதற்கான ஆதாரமாக அமைகின்றன” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் நீல் அர்னால்டு தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய ஷெபீல்டு பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் பட்சர் கூறுகையில், “இந்த ஆய்வு இன்று செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உள்ளது என்பதற்கான சிறந்த குறிப்பை அளிக்கிறது, ஏனென்றால் பூமியில் உள்ள துணை பனிப்பாறை ஏரிகளை தேடும் போது நாம் தேடும் இரண்டு முக்கிய ஆதாரங்கள், இப்போது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

“திரவ நீர் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். இருந்தாலும், இதனால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டு என்று அர்த்தம் கொண்டு விட முடியாது” எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆராய்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்கள் ‘நேச்சர் ஆஸ்ட்ரனாமி’ பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools