X

செய்தி வாசிப்பாளராக நடிக்கும் அபிநயா

நாடோடிகள் படம் மூலம் அறிமுகமானவர் அபிநயா. இயல்பிலேயே வாய் பேச முடியாத அபிநயா சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். அடுத்து அவர் ஆபரேசன் அரபைமா என்ற படத்தில் செய்தி வாசிப்பாளராக நடிக்கிறார்.

ரகுமான் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய ப்ராஷ் இயக்குகிறார். ப்ராஷ், இந்திய ராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர். டைம் அண்ட் டைடு பிரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும், இந்த படத்தை பற்றி ப்ராஷ் கூறியதாவது:-

’நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாக கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது. சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது. ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கதை’ என்றார். மேலும் அரபைமா என்பது கடலில் இருக்கும் ஒருவகை மீன் என்று விளக்கம் அளித்தார்.