சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை வழங்கி வருகிறார்.
அவர் ஏற்கனவே தி.நகர், ஆவடி, பூந்தமல்லி, திருமுல்லைவாயல் பகுதிகளில் நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். நேற்று தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
இந்த நிலையில் இன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
பெரும்பாக்கத்தில் ஆற்றங்கரையோரம் வசித்த பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு வசித்து வந்தனர்.
இந்த நிலையில் தாழம்பூர், காரணை சதுப்புநில பகுதிகளில் இருந்து சமீபத்தில் பெய்த மழை காரணமாக வெள்ளம் இந்த பகுதிகளுக்கு வந்தது. இதனால் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் 3000-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இங்கு முட்டளவு தண்ணீர் உள்ளது.
அந்த வீடுகளில் வசித்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து மழை வெள்ளம் சூழ்ந்த செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதிக்கு இன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு முட்டளவு தண்ணீரில் அவர் நடந்து சென்று வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.
பின்னர் அந்த வழியாக வெள்ளம் செல்லும் பகுதியை நுங்கம்பாளையம்- பெரும்பாக்கம் இணைப்பு சாலை மேம்பாலத்தில் ஏறி நின்றபடி பார்வையிட்டார். அதன்பிறகு அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகளையும் வழங்கினார்.
அவரிடம் அந்த பகுதி பொதுமக்கள் ‘இந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வுகாண வேண்டும். தாழம்பூர், காரணை சதுப்பு நில பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரை கால்வாய் அமைத்து பக்கிங்காம் கால்வாயில் இணைத்து கடலில் கலக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள்.
இதையடுத்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.