Tamilசெய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கிருஷ்ணா நதிநீர் மற்றும் தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று காலை நேர நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 20.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,781 மில்லியன் கனஅடியாகவும், ஏரிக்கு நீர்வரத்து 1,720 கனஅடியாகவும் இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில் 21.13 அடிக்கு தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் நீர்மட்டம் 22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி 22 அடி உயரத்தை விரைவில் எட்டவுள்ள நிலையில் ஏரியின் 5 கண் மற்றும் 19 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற வாய்ப்புள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.