கறுப்பர் நகரம், மெட்ராஸ் சமூகம் மற்றும் வணிகத்தின் மையமாக இருந்தது. ஆனால் மெட்ராஸுக்குள் ரயில் வரவேண்டும் என்றபோது அதற்குப் போதிய இடமில்லை. (170 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் கருப்பர் நகருக்கு அடியில் வரும்) கோட்டையின் வடக்குப் பகுதியில் பாதுகாப்புச் சுவர் கட்டப்படுவதற்கு முன்பே மக்கள் மறுபுறம் குடியேறத் தொடங்கினர். சுங்கச் சாவடியைக் கோட்டையிலிருந்து கருப்பர் நகருக்கு மாற்றியதால், சேப்பாக்கத்தில் தங்கியிருந்த மசூலா மீனவர்கள், தினந்தினம் செல்ல முடியாத தொலைவில் இருந்தனர்.
அவர்கள் கப்பல்கள் நங்கூரமிடும் இடத்திற்கு அருகில் ஒரு பகுதியை ஒதுக்கச்சொல்லிக் கம்பெனியிடம் கோரினர். அவர்களுக்குக் கறுப்பு நகருக்கு வடக்கே சில ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. கூடவே, அவர்கள் ஒரு செயின்ட் பீட்டர் தேவாலயத்தைக் கட்ட கம்பெனியர் நிதியுதவியும் செய்தனர். இயேசுவின் சீடர், பீட்டர் தமிழில் ராயப்பா என்று அழைக்கப்பட்டதால், அந்த நகரம் ராயபுரம் ஆனது. அங்கு நெரிசலான பிளாக்டவுன் போலல்லாமல் ஒரு ரயில் நிலையத்திற்கு நிறைய இடம் கிடைத்தது. ராயபுரம் பகுதி, நகரம் மற்றும் துறைமுகத்திற்கு அருகிலும் இருந்தது கூடுதல் ஆதாயம்.