மெட்ராஸ் கலங்கரை
உலகின் ஏழு புராதன அதிசயங்களில் ஒன்று எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம். அந்த அளவுக்குக் கலங்கரை விளக்கம் ஒரு முக்கியமான கடல் வர்த்தகம் சார் அமைப்பாக இருந்தது. பழங்காலத்திலிருந்தே கலங்கரை விளக்கங்கள் ஆபத்தான ஆழமற்ற கடலையும் அபாயகரமான பாறைகளையும் குறித்து கப்பல் மாலுமிகளை எச்சரிக்க உதவியதால் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருந்தன. இதனால் வர்த்தகம் விரிவடைந்தது. நாடுகளுக்கிடையேயான தொடர்பு அதிகரித்தது. அதன் காரணமாக மனிதச் சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியில் பல நன்மைகள் இருந்தன.
மெட்ராஸ் கரடுமுரடான கடற்கரையைக் கொண்டிருந்தது. 1639இல் கோட்டையைக் கட்டுவதற்கான தொடக்கக் காலங்களில் மெட்ராஸ் வந்த மூன்று கப்பல்களில் இரண்டு கப்பல்கள், முதல் சில நாட்களில் ஒரு சூறாவளியில் தரை தட்டி மூழ்கின. இரவுக்குப் பிறகு சென்னையை நெருங்கும் கப்பல்கள் கோவளம் பாறைகளின் அபாயத்தை எதிர்கொண்டன. வடக்கில், புலிக்காட்டில் ஆழமற்ற கடலின் மணல் திட்டுகள் கப்பல் தரை தட்டும் அபாயத்தைத் தந்தது. ஆரம்ப நாட்களில் மீனவப் பெண்கள் கடற்பகுதியில் மாலுமிகளை வழிநடத்துவதற்காகக் கடற்கரையில் நெருப்பு மூட்டினர் என்ற செவி வழிச் செய்தியும் உள்ளது.