ஏழு வெவ்வேறு சாலைகளை இணைத்து மவுண்ட் ரோட்டை உருவாக்கிய டி ஹேவில்லேண்ட் ஒரு பொறியாளர். மெட்ராஸுக்கு அவர் செய்திருந்தது கொஞ்சம் நஞ்சம் இல்லை. ஆற்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த பல போர்களில் பங்கேற்ற பிறகு, கட்டடக்கலையில் இருந்த தனது ஆர்வத்தில் நேரத்தைச் செலவிட விரும்பினார்.
மெட்ராஸ் நகரத்திற்கு அவர் ஆற்றிய பல பொறியியல் பங்களிப்புகளில் பெரும்பாலானவை இன்னும் உள்ளன. ஒன்று மட்டும் இல்லை.
1820இல் கட்டி முடிக்கப்பட்ட கடல் அரண் (bulwark) மெட்ராஸின் வளர்ச்சியில் முக்கியமானது. நகரத்தின் ஆரம்ப நாட்களில் கடல் மிகவும் சீற்றமாக இருந்தது. கடற்கரை அகலத்தில் மிகவும் சிறியதாக இருந்ததால் மோசமான வானிலையில் கடல் நீர் நகரத்தை ஆக்கிரமித்து 100 மீட்டர் வரை ஊடுருவியது. நகரின் வீடுகள் மற்றும் ஏற்றுமதி செய்யத் துணிகளைச் சேமித்து வைத்திருந்த கிடங்குகள் மிகவும் சேதத்தைச் சந்தித்தன.