சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2021-ம் ஆண்டு முடிந்து 2022-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் தமிழகம் எல்லா வகையிலும் மேம்பட இந்த நேரத்தில் நாம் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ள அரசின் கொள்கை குறிப்புகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஒருசிலர் வேண்டுமென்றே குறை கூறியும் இருக்கிறார்கள்.

தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநரும் கவர்னர் உரையில் பாராட்டி பேசியுள்ளார். இந்த பாராட்டு எனக்கு கிடைத்தது மட்டும் கிடையாது. அமைச்சர்களுக்கும், தமிழக மக்களுக்கும், இங்கு அமர்ந்துள்ள அரசு அதிகாரிகளுக்கும் கிடைத்த பாராட்டாகவே அதனை கருதுகிறேன்.

பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நாம் நல்லாட்சி நடத்தி வருகிறோம். அ.தி.மு.க. உறுப்பினர் வைத்தியலிங்கம் பேசும்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நாம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பாராட்டினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்திருந்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வெள்ள பாதிப்புக்கு தி.மு.க. அரசை எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நம்மை குறை கூறுவதற்கு அவர்களுக்கு தகுதியில்லை. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்து விட்டு செயற்கை பேரிடர்வை உருவாக்கியவர்கள்தான் அவர்கள்.

அப்போது மக்கள் நூற்றுக்கணக்கில் பலியானார்கள். சொந்த ஊரிலேயே அகதிகள் போல ஆக்கப்பட்டார்கள். ஆனால் தமிழக அரசு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை திறமையாக கையாண்டது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக சரி செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கை அளித்துள்ளனர்.

இதையடுத்து சென்னை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய முதல் கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். வரும் காலங்களில் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools