சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த மதுரையை சேர்ந்த நசிருதீன்(வயது 51), பக்ருதீன்(25), முகமது நஜிமுல்லா (25) ஆகியோர் மீது சந்தேகம் அடைந்த விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் வெளிநாட்டு சிகரெட்டுகள், மடிக்கணினிகள் இருந்தன. 3 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 3 பேரிடம் இருந்தும் ரூ.35 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 974 கிராம் தங்கத்தையும், ரூ.46 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் மற்றும் சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்வதற்காக வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிலிப்(51), சிகர்(61) ஆகியோரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் அவர்களது சூட்கேசில் யூரோக்களை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.18 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள யூரோக் களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.