Tamilசெய்திகள்

சென்னை வந்தடைந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் – தமிழக அரசு திட்ட துவக்க விழாவில் பங்கேற்பு

ஆசிரியர் தினமான இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமான புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்களின் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது.

தமிழக அரசின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இருந்து நேற்றிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு ஆம் ஆத்மி தலைவர் வசிகரன் உள்பட பலர் அவரை வரவேற்றனர்.

சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று காலை நடைபெறும் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால், 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரி பள்ளிகளையும் தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.