கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது அந்த ரெயிலில் இளம்பெண் ஒருவர், கைக்குழந்தையை காண்பித்து பிச்சையெடுத்தார். அந்த குழந்தைக்கு உடலில் தீக்காயங்கள் இருந்தது. அந்த காயத்தில் கையை வைத்து அழுத்தி குழந்தையை அழச்செய்து அந்த பெண் பிச்சையெடுத்துள்ளார். இதனை கவனித்த பயணிகள் சிலர், அதுகுறித்து அந்த ரெயிலின் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர்.
மேலும் அந்த ரெயில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்துக்கு வந்தபோது, அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையை காண்பித்து பிச்சையெடுத்த அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண்ணை கைது செய்தனர். அவர் வைத்திருந்த குழந்தை எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், மீட்கப்பட்ட குழந்தைக்கும் உள்ள உறவு தொடர்பாக ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு அந்த பெண்ணுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படடையில் மேல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.