இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி அவதாரமாக உருவெடுத்துள்ள சூர்யகுமார் யாதவ் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள ருசிகர பேட்டி வருமாறு:- கேள்வி: 20 ஓவர் கிரிக்கெட்டில் உங்களது சிறந்த இன்னிங்ஸ் எது? பதில்: கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக இன்னிங்சில் 31 பந்தில் 57 ரன்கள் எடுத்தேன். அணியும் வெற்றி பெற்றது. அது எனக்கு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ஒரு இன்னிங்ஸ். கேள்வி: மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடுவதில் இருந்து ஒரு ஷாட்டை விரும்பி எடுத்துக் கொள்வதாக இருந்தால் அது யாருடைய ஷாட்? பதில்: ரோகித் சர்மா அடிக்கும் புல் ஷாட்.
கேள்வி: உங்களுக்கு பிடித்தமான ஷாட் எது? பதில்: முட்டிப்போட்டு அடிக்கும் ‘ஸ்வீப்’ வகை ஷாட். கேள்வி: கடந்த கால பந்து வீச்சாளர்களில் ஒருவரின் பந்து வீச்சை எதிர்கொள்வதாக இருந்தால் அது யாருடையதாக இருக்கும்? பதில்: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) கேள்வி: உங்களுக்கு அதிகமான மெசேஜ் அனுப்பும் கிரிக்கெட் வீரர்கள் யார்? பதில்: இஷான் கிஷன், ரிஷப் பண்ட். கேள்வி: உங்களுக்கும், விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடையே 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றால் யார் வெற்றி பெறுவார்கள்? பதில்: விராட் கோலி. கேள்வி: நீங்கள் இதுவரை விளையாடியதில் சிக்சர் விளாசுவதற்கு மிகவும் கடினமாக இருந்த மைதானம் எது? பதில்: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம். ]
இவ்வாறு சூர்யகுமார் கூறினார்.