Tamilசெய்திகள்

சென்னை மேயராக நிர்வாகம் செய்வதற்கு நல்ல சிந்தனையும் ஆற்றலும் இருந்தால் போதும் – அமைச்சர் சேகர் பாபு பேட்டி

 

சென்னை மாநகராட்சி மேயர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பி.கே.சேகர்பாபு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மேயராக வடசென்னை பகுதியை சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்த இளம் வயது சகோதரி முதன் முதலாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

அவரை மேயராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெருமையாக உள்ளது.

சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அந்த வகையில் புதிய மேயருடைய பணி அமையும். முதல்-அமைச்சருடைய வழிகாட்டுதலின் பேரில் அனைவரும் செயல்படுகிறோம். அந்த வகையில் சென்னை மேயரும் பின்பற்றி செயல்படுவார்.

முதல்வருடைய எண்ணங்கள் எப்போதும் தோல்வியை சந்தித்தது இல்லை. அவரது சிந்தனையில் உருவாகும் எண்ணங்கள் வர்ணங்களாக மாறி இருக்கிறது. முதல்வரின் தொலைநோக்கு எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் புதிய மேயர் பணி அமையும்.

திறமையாக நிர்வாகம் செய்வதற்கு வயது தேவையில்லை. நல்ல சிந்தனையும் ஆற்றலும் இருந்தால் போதுமானது.

மேயர் பதவியேற்பு விழாவில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களை வழிநடத்தக் கூடியவர்களை பின்பற்றி அவர்களும் செயல்படுகிறார்கள்.

கடந்த ஆட்சியில் ஸ்மார் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.