Tamilவிளையாட்டு

சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சாதித்தார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது.

21 வயதான வாஷிங்டன் சுந்தர், முதல் இன்னிங்சில் 62 ரன்னும், 2-வது இன்னிங்சில் 22 ரன்னும் எடுத்தார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சென்னையை சேர்ந்த அவர், தனது அறிமுக டெஸ்டிலேயே சாதித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இந்தநிலையில் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர், சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக அவரை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.

முதல் முறை வாக்காளரான வாஷிங்டன் சுந்தர், இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்களிப்பை செலுத்த ஊக்கமாக இருப்பார் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

‘இது நம்ம இன்னிங்ஸ்’ என்ற ஹேஸ்டேக் மூலம் வாஷிங்டன் சுந்தர் நியமனம் தொடர்பாக வீடியோவுடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு சென்னை திரும்பிய அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட நாள் தனிமைக்கு பிறகு சென்னை முழுவதும் இளம் வாக்காளர்களை கவர நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் வாஷிங்டன் சுந்தர் ஆன்லைன் மூலம் பங்கேற்க உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.