தமிழக கடலோரப் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 24, 25, 26 ஆகிய தேதிகளில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
நள்ளிரவுக்கு மேல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, தி.நகர், கே.கே.நகர். அண்ணா சாலை, திருமங்கலம், திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், பெரம்பூர், ஓட்டேரி, புரசைவாக்கம் என பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இதேபோல் பூந்தமல்லி, போரூர், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், திருவேற்காடு, வேலப்பன்சாவடி, குமணன்சாவடி, மாங்காடு, மௌலிவாக்கம், முகலிவாக்கம், கோவூர் ,குன்றத்தூர், கரையான்சாவடி, நசரத்பேட்டை, திருமழிசை உள்பட சென்னை புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. மழை காரணமாக ஆங்காங்கே தாழ்வான சாலைப் பகுதிகளில் மழை நீர் தேங்கியது.