X

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு, சுழற்சி நிலவுகிறது. இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 4-ந்தேதி வரை 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இன்றும் நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (1-ந்தேதி) திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2-ந்தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 3-ந்தேதி தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 4-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பருவமழை தொடங்கி பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்கிறது. சென்னையில் இன்று காலையில் மழை பெய்தது. அதன்பின்னர் லேசான வெயில் இருந்தபோதும் உடனே மேகங்கள் சூழ்ந்து இருண்டு மழை பெய்கிறது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.