சென்னை பெசண்ட் நகர், வண்ணாரப்பேட்டையில் மறுவாக்குப் பதிவு இன்று தொடங்கியது
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில இடங்களில் மட்டுமே சிறிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன.
சென்னையில் பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் 179-வது வார்டில் 5059 எண் வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரங்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.
இதன்படி இன்று இந்த வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு போட்டனர். மறுவாக்குப்பதிவு நடைபெற்ற இந்த வாக்குச்சாவடியில் 1,326 வாக்குகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 660 பேரும், பெண் வாக்காளர்கள் 666 பேரும் உள்ளனர்.
இவர்கள் இன்று ஆர்வமுடன் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்பாக மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 9 மணி அளவில் 188 பேர் வாக்களித்து இருந்தனர்.
வண்ணாரப்பேட்டையில் வார்டு எண் 51-க்குட்பட்ட 1174 எண் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு புகார் மற்றும் மின்னணு எந்திரம் சேதப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த வாக்குச்சாவடியிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
இங்கு 458 ஆண் வாக்காளர்கள், 536 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 994 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குச்சாவடியிலும் இன்று காலையில் விறுவிறுப்பான மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 9 மணி வரை 42 பேர் ஓட்டு போட்டு இருந்தனர்.
2 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்குச்சாவடி முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. பூத் சிலிப்பை காட்டி ஓட்டு போடுவதற்கு தகுதியானவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். வெளி ஆட்கள் யாரையும் போலீசார் அந்த பகுதியில் அனுமதிக்கவில்லை.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் 2 வாக்குச்சாவடிகளிலும் மீண்டும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.
இதே போன்று மதுரை, அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இன்று சில வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு 16-க்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 16-லும் இன்று மறு வாக்குப்பதிவு நடந்தது.
அங்கு காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்காளர்கள் வந்திருந்தனர். அவர்கள் வரிசையில் காத்திருந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தவர்களிடம் கையெழுத்து பெறாமல் ஓட்டுபோட அனுமதித்ததாக தி.மு.க. வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் அலுவலர்களிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி இன்று காலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பெண்கள் வாக்குச்சாவடியான காலையிலேயே அதிகளவு திரண்டு வந்து பெண்கள் ஓட்டு போட்டனர்.
திருவண்ணாமலையில் நகராட்சிக்குட்பட்ட 39 வார்டுகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 25-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட ஸ்ரீதேவி ஆட்களை திரட்டி வந்து கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி 16.35 சதவீத வாக்கு பதிவாகியிருந்தது.
கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போது இடது கை ஆள் காட்டி விரலில் மை வைக்கப்பட்டதால் இன்று நடைபெற்ற மறு வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது.
இன்று ஓட்டு போட்டவர்கள் இந்த இரண்டு விரல்களையும் காண்பித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.