தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி, வானகரம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காட்டுப்பாக்கம், பூவிருந்தவல்லி, ஐயப்பன்தாங்கல், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.
புதுச்சேரி முதலியார்பேட்டை, மரப்பாலம், ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.