சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் தேங்க எடப்பாடி பழனிசாமி தான் காரணம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு
சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளதாவது:
ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம்,கணேஷ் நகர், முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர் ஆகிய பகுதிகளில்தான் தண்ணீர் தேங்கியுள்ளது. மதுரவாயில் புறவழிச் சாலையில் தண்ணீரை உரிய கல்வெர்ட் அமைக்காததால் தண்ணீர் வெளியேற முடியவில்லை. இதனால் ஐய்யப்பன் தாங்கல், பரணிப்புத்தூர், சின்னபனிச்சேரி, கொளத்துவான்சேரி ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். இதற்கு எல்லாம் காரணம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து திட்டம் தயாரித்தோம். தேசிய நெடுஞ்சாலைத் துறை கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, பொதுப் பணித்துறை இத்திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. இவ்வழக்கில் 2017 ஆம் ஆண்டு இரண்டு துறைகளும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் பொதுப் பணித்துறைக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த சட்டசபையில் கோரிக்கை வைத்தேன். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்காததுதான் இன்றைய நிலைக்கு காரணம்.
கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக என்னை அழைத்து சென்று இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, அதிகாரிகளுக்கு எல்லாம் உத்தரவிட்டு இந்த நிலைய முற்றிலுமாக போக்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கி தந்தார். செம்பரம்பாக்கதில் இருந்து வரும் தந்தி கால்வாய்க்கு கட் அண்டு கவர் அமைக்கும் பணியும், போரூரிலிருந்து ஒரு கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மதுரவாயில் புறவழிச்சாலையில் ஒரு புஸ்- கல்வெர்ட்டு நேற்று தான் அந்த சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்தில் வெளி வந்தது. தற்போது இதன் வழியாக 400 கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.