X

சென்னை பால் தட்டுப்பாடு இல்லை – ஆவின் நிர்வாகம் விளக்கம்

ஆவின் பால் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. ஒப்பந்த காலம் நிறைவடைந்த பிறகு மறு டெண்டர் மூலம் வாடகையை உயர்த்த வேண்டும்.

2 வருடமாக பழைய வாடகை ஒப்பந்தத்தில் லாரிகள் இயக்கப்படுவதால் லாரி உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திப்பதாக கூறி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கடந்த 14-ந்தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 32 லட்சம் லிட்டர் ஆவின் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் சென்னைக்கு மட்டும் 12 லட்சம் லிட்டர் பால் தினமும் சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் ஆவின் நிர்வாகம் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.

ஒப்பந்தம் போடாமல் உள்ள தனியார் டேங்கர் லாரிகளை வாடகைக்கு எடுத்து தமிழகம் முழுவதும் பால் சப்ளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆவின் நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் இதுவரையில் பால் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. 300 ஒப்பந்த லாரிகள் பால் வினியோகத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இதில் 120 லாரிகள் சென்னைக்கு பால் சப்ளை செய்கின்றன. பால் சப்ளை செய்வதில் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் 80 லாரிகள் கொண்டு வரப்பட்டு தடையின்றி வினியோகம் செய்யப்படுகின்றன.

வேலை நிறுத்தத்தால் பால் சப்ளை பாதிக்காது தட்டுப்பாடும் ஏற்படாது. புதன்கிழமை வரை பால் கையிருப்பு உள்ளது. பால் தட்டுப்பாட்டை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம். வேலை நிறுத்தம் நீடித்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

சென்னையை பொறுத்தவரை ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை. தட்டுப்பாடு ஏற்படும் என நினைத்து பொதுமக்கள் தற்போது கூடுதலாக வாங்குகிறார்கள். அதற்கேற்றவாறு சப்ளை செய்கிறோம்.

இப்போது கூடுதலாக 60 ஆயிரம் லிட்டர் விற்பனையாகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு எப்போதும் போல் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வாடகை ஒப்பந்த டெண்டர் ஒரு வாரத்தில் விடுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்குள்ளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று செயல்படுகின்றார்கள். இந்த டெண்டர் ரூ.350 கோடி மதிப்பிலானது. அதிகாரிகளுடன் கலந்து பேசிதான் முடிவு செய்யப்படும்.

10 முதல் 15 சதவீதம் வரை வாடகை உயர்வு அளித்து டெண்டர் விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news