Tamilசெய்திகள்

சென்னை – நாகர்கோவில் இடையிலான புதிய வந்தே பாரத் ரெயிலை தினசரி இயக்க முடிவு

சென்னையில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் அங்கிருந்து சென்னைக்கு வரும் ரெயில்களும் எப்போதும் நிரம்பி காணப்படுகின்றன. 4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தாலும் இடம் கிடைப்பது இல்லை. பண்டிகை காலங்களில் வழக்கமான நாட்களை விட கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. எத்தனை சிறப்பு ரெயில்கள் விட்டாலும் இடங்கள் நிரம்பி விடுகின்றன.

ரெயிலில் பயணம் செய்யவே மக்கள் விரும்புவதால் பயண நேரத்தையும் கூட்ட நெரிசலையும் குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவேக ரெயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் திருநெல்வேலி-எழும்பூர் இடையே வந்தே பாரத் ரெயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து தற்போது வாரத்தில் வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.இந்த நிலையில் தென் மாவட்ட மக்களின் தேவையை அறிந்து ரெயில்வே வாரியம் எழும்பூர்-நாகர்கோவில் இடையே தினசரி ரெயிலாக இயக்க முடிவு செய்து அறிவித்தது.

வருகிற 20-ந்தேதி புதிய வந்தே பாரத் ரெயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. அதற்கான பணிகளில் தெற்கு ரெயில்வே தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென பிரதமர் நிகழ்ச்சியை ஒத்தி வைத்தார். எந்த தேதியில் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவை தினமும் இயக்கப்படும் வகையில் அட்டவணை தயாராகிறது. புதிய கால அட்டவணைப்படி ஓடத் தொடங்கும். ஆனால் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் இல்லை. தற்போது சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்சிகி யூடிவ் வகுப்பு கட்டணம் ரூ.3025-ம், சேர்கார் கட்டணம் ரூ.1,605-ம் வசூலிக்கப்படுகிறது. உணவு இல்லாமல் வசூலிக்கப்படும் இந்த கட்டணம் விமான கட்டணத்தை விட மிகவும் குறைவாகும்.

அதிகாலையில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு சென்றடைந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்குள் சென்னை வந்து சேரும் வகையில் நேரம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 7 நிலையங்களில் நின்று செல்லும். ஒரு நிமிடம் நின்று அதன் பிறகு புறப்பட்டு செல்லும்.

புதிய வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு தினசரி இயக்கப்பட உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்களை சார்ந்த பிரதிநிதிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மதியம் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேர முடியும்.