Tamilசெய்திகள்

சென்னை தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை – 7 வட மாநிலத்தவர் கைது

நங்கநல்லூர், எஸ்.பி.ஐ. காலனி விரிவு 2-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் ரமேஷ். தொழில் அதிபரான இவர் கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். இவர் சபரிமலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் அவரது மனைவியும், மகள்களும் இருந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

பீரோவில் இருந்த 120 பவுன் நகை, 10 பவுன் வைர நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

கொள்ளை கும்பலை பிடிக்க இணை கமி‌ஷனர் மகேஸ்வரி தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் வட மாநில வாலிபர்கள் சிலர் நேற்று முன்தினம் மதியம் ரமேசின் வீட்டின் அருகே சுற்றித்திரிவதும், பின்னர் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து கொள்ளையடித்த நகைகளை பையில் போட்டு வெளியே வரும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். கொள்ளையர்கள் அனைவரும் வடமாநிலம் செல்லும் ரெயிலில் தப்பி செல்வது தெரிந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அனைத்து மாநில குற்றப்பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்ய உதவி கேட்டு இருந்தனர்.

இந்தநிலையில் மத்திய பிரதேசம் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்ற 7 வாலிபர்களை அம்மாநில போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சென்னையில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பி வந்திருப்பது தெரிந்தது.

இதுபற்றி அவர்கள் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உதவி கமி‌ஷனர் சங்கரநாராயணன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் விமானம் மூலம் மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.

அங்கு கைதான கொள்ளையர்கள் 7 பேரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை சென்னை கொண்டுவந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பிடிபட்ட கொள்ளையர்கள் பற்றிய பெயர் விபரத்தை போலீசார் தெரிவிக்க வில்லை. அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களுக்கு பவாரியா கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சென்னையில் 120 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. ஆனால் பிடிபட்ட கும்பலிடம் 500 பவுனுக்கும் மேல் நகைகள் உள்ளன. எனவே அவர்கள் மேலும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது.

இன்று அல்லது நாளை கைதான கொள்ளையர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவர்களிடம் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து கூடுதல் தகவல் வெளிவரும்.

கொள்ளை நடந்த நாளில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ மூலம் மர்ம நபர்கள் 3 பேர் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்துக்கு சென்றதை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை வைத்து விசாரிக்கும் போதுதான் கொள்ளையர்கள் சென்ட்ரலில் இருந்து ரெயில் மூலம் தப்பி சென்றிருப்பது தெரிந்தது. இதனை வைத்து வடமாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருந்தனர். இதன்மூலம் தற்போது கொள்ளையர்கள் 7 பேர் சிக்கி உள்ளனர்.

கொள்ளை நடந்த ரமேசின் வீட்டின் எதிரே புதிதாக வீடுகட்டும் பணி நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக அங்கு வேலை நடக்கவில்லை. அங்கு வேலைபார்த்த வடமாநில வாலிபர்கள் வரவில்லை.

இதனால் கைதான கொள்ளையர்கள் கட்டுமான பணியில் வேலைபார்த்தனரா? என்றும் விசாரணை நடக்கிறது.

அவர்களது கூட்டாளிகள் சென்னையில் வேறு எங்காவது தங்கி உள்ளனரா? என்றும் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *