Tamilவிளையாட்டு

சென்னை தொழிலதிபர் மீது பண மோசடி புகார் அளித்த ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் தன்னிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 4 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததாகவும், அந்த பணத்தை பெற்றுத் தரும்படியும் சென்னை மாநகர காவல்துறையிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். தொழிலதிபர் மற்றும் சிலர் தன்னை ஏமாற்றியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அந்த தொழிலதிபர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தன்னிடம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுத்தரும்படி ஹர்பஜன் சிங் சென்னை மாநகர காவல் துறையிடம் அளித்திருந்த புகார் மனுவியில் கூறியிருப்பதாவது:-

சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் அறிமுகமானார். தொழிலை விருத்தி செய்யப்போவதாகத் தெரிவித்து 2015ஆம் ஆண்டு என்னிடம் 4 கோடி கடன் வாங்கினார். அதன்பின்பு, அவரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி 25 லட்ச ரூபாய்க்கான செக் வழங்கினார். ஆனால் அந்த செக் பவுன்ஸ் ஆனது.

இவ்வாறு ஹர்பஜன் கூறியிருந்தார்.

ஹர்பஜன் சிங்கின் புகார் மனு மீது சென்னை நீலாங்கரை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரையா தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார்.

இதனால், குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேஷ் தனது வழக்கறிஞர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

பணம் மோசடி குறித்து மகேஷ் கூறுகையில், சென்னைக்கு அருகில் உள்ள தாளம்பூரில் உள்ள எனது அசையா சொத்துக்களை பிணையாக வைத்துதான் ஹர்பஜன் சிங்கிடம் பணம் பெற்றேன். இதற்காக திருப்போரூரில் உள்ள சார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். ஆவண எண் 3635/2015. ஹர்பஜன் சிங்கிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்திவிட்டேன்’ என்றார்.