சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஏற்கனவே மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கொரோனா முழு ஊரடங்கின்போது இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த ரெயில் இதுவரை இயக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து ரெயில் பயணிகள் சங்கத்தினர் சென்னை-திருப்பதி மின்சார ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்துக்கு மனு அனுப்பி கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து சென்னை-திருப்பதி இடையே மின்சார ரெயிலை இயக்குவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரெயில் (06727) நீட்டிப்பு செய்யப்பட்டு, சென்னை-திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத விரைவு ரெயிலாக இன்று (13-ந் தேதி) முதல் இயக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இந்த ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.50 மணிக்கு புறப்பட்டது. அது பிற்பகல் 1.40 மணிக்கு திருப்பதியை சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில் மாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.
இந்த ரெயில் பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், வில்லி வாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, அரக்கோணம், திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புத்தூர், ரேணிகுண்டா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.