Tamilவிளையாட்டு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டோனிக்கு கிடைத்த மரியாதை ஜடேஜாவுக்கும் கிடைக்கும் – சுரேஷ் ரெய்னா கருத்து

சென்னையில் எம்.எஸ்.தோனிக்கு கிடைத்த அதே வரவேற்பும், புகழும் மற்றொரு வீரருக்கும் கிடைக்கப்போகிறது. அதனை இந்த சீசனிலேயே அவர் நிரூபித்துக்காட்டுவார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே 28-ம் தேதியன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி போட்டி அட்டவணைகள் சமீபத்தில் வெளியாகின. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் உற்சாகம் காத்துள்ளது என்றே கூறலாம். இதற்கு காரணம் அனைத்து அணிகளும் ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என கூறப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.டோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் எனத்தெரிகிறது. அந்தவகையில் சென்னை மைதானத்தில் தனது கடைசி போட்டியை விளையாடிவிட்டு விடை பெறுவார் எனத்தெரிகிறது. மற்றொரு புறம் கடந்தாண்டு பாதி போட்டிகளில் ஜடேஜாவின் கேப்டன்சியும், பாதி போட்டிகளில் டோனியின் கேப்டன்சியும் இருந்ததால் சொதப்பலானது. ஆனால் இந்த முறை தவறுகளை சரிசெய்ய முணைப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் இந்தாண்டு டோனிக்கு கிடைக்கும் அதே பெருமை ஜடேஜாவுக்கும் கிடைக்கும் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தனது ஃபார்ம் என்னவென்பதை நிரூபித்து காட்டியுள்ளார். டோனிக்கு மிகப்பெரிய தூணாக இருக்க முடியும் என ஜடேஜா நிரூபித்து காட்டியுள்ளார். தற்போது மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் நன்கு ஃபிட்டாக இருக்கிறார். சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்றால் நிச்சயம் டோனிக்கு கிடைத்த மரியாதை ஜடேஜாவுக்கும் கிடைக்கும்.

தொடர்ந்து பேசிய அவர், ருதுராஜ் கெயிக்வாட் சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் விளையாடுவார். அவர் இந்த முறை நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த சீசனின் சென்னையில் வெற்றியுடன் தொடங்கும்.
ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்ற டோனியும் தயாராக உள்ளார். என ரெய்னா கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.