சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் குறைப்பு – மக்கள் அவதி
சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களான எழும்பூர், சென்ட்ரலுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் காலை, இரவு என எப்போதும் இந்த ரெயில் நிலையங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.
இங்கு பயணிகள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய எழும்பூரில் 8 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டு வந்தது. அதேபோல் சென்ட்ரல் நிலையத்தில் 10 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டன. இதன் மூலம் பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு கவுண்ட்டர்கள் மூடப்பட்டது. தானியங்கி டிக்கெட் எந்திரம், செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் சில கவுண்டர்கள் மூடப்பட்டது.
கடந்த சில நாட்களாக 4 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதே போல முன்பதிவில்லா டிக்கெட் வினியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் டிக்கெட் எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. ரெயிலை தவற விடும் நிலை உருவாகிறது.
மேலும் முன்பதிவு டிக்கெட் எடுக்க வரும் பல பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:-
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
ரெயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க கூட்டம் எப்போதும் அலைமோதும். அவசர பயணமாக செல்லும் பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து அதிகஅளவில் பயணம் செய்வார்கள். தற்போது முன்பதிவில்லா டிக்கெட் மைய கவுண்டர்கள் குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பெரும் சிரமப்படுகிறார்கள்.
டிக்கெட் வாங்க வரிசையில் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட் கவுண்டர்களில் விரைவில் ஊழியர்களை கூடுதலாக உடனடியாக நியமிக்க வேண்டும். அப்போது தான் முன்பதிவு டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டுகள் எளிதில் பெற முடியும். தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் இருந்தாலும் அதில் ஒரே நேரத்தில் டிக்கெட் பெற வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதியை குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் பெறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே ரெயில் டிக்கெட்டை பயணிகள் சிரமம் இல்லாமல் பெற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.