ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2009 முதல் 2015-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது ஐ.பி.எல். அனுபவம் குறித்து இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் 2 ஆட்டங்களில் மோசமாக விளையாடியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நான் நீக்கப்பட்டேன். அதனை எனது முகத்தில் விழுந்த கடினமான அறை போல் உணர்ந்தேன். அதாவது அந்த நிகழ்வு அந்த இடத்துக்கு சம்பந்தம் இல்லாதவன் என்பதை புரிந்து கொள் என்பது போல் இருந்தது. 20 ஓவர் போட்டியில் பந்து வீசுவது என்பது முதல் தர போட்டியில் வீசுவதை விட எளிதானது தான் என்று அப்போது நான் நினைத்து இருந்தேன்.
பெங்களூருவில் நடந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராபின் உத்தப்பா, மார்க் பவுச்சர் ஆகியோர் எனக்கு கடினமான பாடத்தை புகட்டினார்கள். அந்த போட்டியில் நான் 14-வது, 16-வது, 18-வது மற்றும் 20-வது ஓவர்களை வீசினேன். எனக்குள் இருந்த இளமை அதனை ஒரு சவாலாக பார்க்கவில்லை. அதனை விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பாகவே பார்த்தேன். நான் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஆனால் 40 அல்லது 45 ரன்களை விட்டுக்கொடுத்தேன். அத்துடன் அணியையும் சிக்கலில் சிக்க வைத்தேன். அடுத்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. அதில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். அதைத்தொடர்ந்து அணியில் இருந்து நீக்கப்பட்டேன்.
அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால், அணிக்கான ஓட்டல் அறையை காலி செய்து விட்டு வீட்டில் அமர்ந்து போட்டிகளை பார்த்தேன். என்னை இன்னும் சற்று சிறப்பாக கையாண்டு இருக்கலாம் என்று நினைத்தேன். நான் அந்த ஆண்டில் வெஸ்ட்இண்டீசில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம் பிடித்து இருந்தேன். நான் முதல் 3 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்தேன். 2 ஆட்டத்தில் மட்டுமே மோசமாக விளையாடினேன். யார் வேண்டுமானாலும் இதுபோல் சில ஆட்டங்களில் ரன்கள் விட்டுக்கொடுக்க நேரிடும். எனவே அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை ஏன்? ஆதரிக்கவில்லை என்று நினைத்தேன்.
உண்மையில் எனக்கு ஸ்டீபன் பிளமிங்குடன் (சென்னை அணி பயிற்சியாளர்) பிரச்சினை இருந்தது. இதனால் அவர் என்னுடன் பேசக்கூட செய்யவில்லை. அவர் மீது எனக்கு அதிக மரியாதை இருந்தது. ஆனாலும் அவர் என்னுடன் பேசவில்லை. வீட்டில் அமர்ந்து போட்டிகளை பார்க்கையில் இந்த நிலையை ஒருநாள் மாற்றுவேன் என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். சில மக்கள் சில வழிகளில் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பார்கள். ரவீந்திர ஜடேஜாவை எடுத்துகொண்டால் அவர் இயற்கையாகவே கிரிக்கெட் வீரருக்குரிய முழுமையான உடல் தகுதியை கொண்டவர். உடல் தகுதியில் நான் அவருடைய நிலையை நெருங்க வேண்டும் என்றால் ஒரு போட்டி தொடருக்கு செல்வதற்கு 2 மாதங்களுக்கு முன்பே உடற்பயிற்சியினை கடுமையாக மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.