Tamilவிளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் காட்சி போட்டி! – 16 ஆயிரம் ரசிகர்கள் பார்த்தார்கள்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதனால் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

23-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 5-ந்தேதிவரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது. ஐ.பி.எல். போட்டிக்கான முழு அட்டவணை விவரம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பயிற்சியில் ஈடுபட்டு வந்த வீரர்கள் நேற்று இரவு காட்சிப் போட்டியில் ஆடினார்கள். சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து 20 ஓவர் ஆட்டம் விளையாடினார்கள்.

ரெய்னா, முரளி விஜய், அம்பதிராயுடு, தீபக் சாஹர், ஹர்சல் தாகூர், ஹர்பஜன்சிங், கரண் சர்மா உள்ளிட்ட வீரர்கள் விளையாடினார்கள்.

டோனி நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டதால் காட்சிப் போட்டியில் ஆடவில்லை.

இந்த காட்சியை பார்க்க ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். சி.டி. மற்றும் இ ஸ்டாண்டின் கேலரிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். காட்சி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. 12 ஆயிரம் ரசிகர்கள் இந்தப் போட்டியை ரசித்து உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் முதல் ஆட்டத்துக்காக டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *