Tamilசெய்திகள்

சென்னை சாலைகளில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் 6-ம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா புரையோடி கிடக்கும் சென்னையில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு காரணமாக நேற்று முன்தினம் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர். கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் நடமாட்டமின்றி சாலைகளும் வெறிச்சோடின.

இந்தநிலையில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு முடிந்த மறுநாளான நேற்று சாலைகளில் வாகனங்கள் பெருக்கெடுத்து ஓடியதை பார்க்க முடிந்தது. பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்களின் படையெடுப்பு இருந்தது. மோட்டார் சைக்கிள்கள், கார்கள் அதிகளவில் சாலையில் ஆர்ப்பரித்து செல்வதை பார்க்க முடிந்தது.

அதேபோல தெருக்களிலும், கடைகளில், வீதிகளிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் கூட்டம் காணப்பட்டது. இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது. தெருமுனைகளில் உள்ள டீக்கடைகளில் பெரியவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று கதை பேசுவதையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

இந்த காட்சிகள் அனைத்தும் கொரோனா பீதி ஓய்ந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு இருந்தது என்பது தான் வேதனை. அந்தளவு மக்கள் கொரோனா பயமின்றி சாலைகளில் கூட்டம் கூட்டமாக செல்வதையும், ஆங்காங்கே நின்று அரட்டை அடித்துக்கொண்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *