சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி தேசியக் கொடி ஏற்றினார்
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார்.
இதேபோல் தமிழகத்திலும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கோட்டைகொத்தளம் உள்பட தலைமைச் செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.
காலை 8.45 மணியளவில் கோட்டை கொத்தளத்திற்கு வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின்னர் 9 மணியளவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கோட்டையில் 3-வது முறையாக தேசியக்கொடி ஏற்றியது குறிப்பிடத்தக்கது.