X

சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் இயற்கை மருத்துவம் அறிமுகம்!

உலகளவில் அபாயகரமான நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், மரபு வழியில் பின் தொடரும் ஒரு சில நோய்களுக்கு இன்றும் முற்றுபுள்ளி வைக்க முடியவில்லை. அவ்வாறான நோய்களை முழுமையாக தடுக்கவும், கட்டுப்படுத்தவும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சமீபத்தில் யோகாவுடன் சேர்த்து இயற்கை மருத்துவ சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில், நீர் சிகிச்சை, ‘மசாஜ்’ சிகிச்சை, நீராவி குளியல், முதுகு தண்டு குளியல் உட்பட பல சிகிச்சைகள் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் 70 முதல் 90 குழந்தைகள் இந்த சிகிச்சைகளை இலவசமாக பெற்று செல்கின்றனர்.

குழந்தைகள் மட்டும் அல்லாமல் குழந்தைகளின் பெற்றோரின் மனஅழுத்தம் மற்றும் மன சோர்வை குறைக்க அவர்களுக்கும் யோகா பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ முறையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி டாக்டர் லதா கூறியதாவது:-

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கும் முறை சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. இதய கோளாறு, நுரையீரல் பிரச்சினை, ஆஸ்துமா, நீரிழிவு நோய், தைராய்டு, தோல் சம்பந்தமான பிரச்சினைகள், நரம்பியல், வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு, இந்த இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதால், குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் வலிமையாக காணப்படுகின்றனர்.

மேலும் வயது வரம்பை கணக்கிட்டு, குழந்தைகளுக்கு யோகா மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். இதனை கற்றுக்கொள்ள சிரமப்படும் குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து பயிற்சி அளிக்கப்படும். இந்த சிகிச்சைகள் மூலம் குழந்தைகளின் உடல் நலனில் பல முன்னேற்றங்கள் காணப்படுகிறது.

இந்த சிகிச்சை பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மையமாக வைத்து அளிக்கப்படுகிறது. மேலும் ‌ஷாவாசனம், நவுகாசனம், தனுராசனம் உள்ளிட்ட பல ஆசனங்களுக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சையில் இருக்கும் போதே சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இந்த சிகிச்சை குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை டாக்டர்கள் உமா மற்றும் ஹேமலதா கூறுகையில், உடலில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது தான், நோய்கள் வருவதற்கான முதல் காரணம். நச்சுச்தன்மையின் ஆனிவேரை கண்டறிந்து அதனை வளரவிடாமல் தடுக்கும் வகையில் நீராவி குளியல், முதுகுதண்டு குளியல், இடுப்பு குளியல், மண் சிகிச்சை, யோகா சிகிச்சை, நிற சிகிச்சை, உணவு முறைகள் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது’ என்றனர்.

குழந்தைகளுக்கென பிரத்யேகமாக யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை ஆசியாவிலேயே முதன் முறையாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது என டாக்டர் லதா தெரிவித்தார்.

Tags: south news