சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மைசூரு மற்றும் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை இடையே 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, தெற்கு ரெயில்வேயின் கீழ் சென்னை எழும்பூர்-நெல்லை இடையே 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இதற்கான பணிகளும் ஒரு சில ரெயில் நிலையங்களில் நடந்து வருகிறது. பயணிகள் மத்தியிலும் இதற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது; ‘தமிழகத்தில் 60 ரெயில் நிலையங்களை ‘அம்ரீத் பாரத்’ என்ற திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த பணிகள் நடந்து வரும் நிலையில், ரெயில் தண்டவாளம் உறுதிப்படுத்துவது, விரைவு ரெயில்களுக்கு ஏற்றவாறு சிக்னல்களின் தன்மையை அதிகரிப்பது போன்ற பணிகளும் நடந்து வருகிறது. சென்னையில் இருந்து நெல்லை வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணி நேரத்தில் 650 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 81 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு வசதி கொண்ட இந்த வந்தே பாரத் ரெயிலை நிறுத்தி வைப்பதற்கு என்று தனியாக ஒரு பிட் லைன் தேவைப்படுகிறது. ஆனால் நெல்லை ரெயில் நிலையத்தில் போதுமான பிட் லைன் வசதி இல்லை. சென்னை அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து மட்டுமே வந்தே பாரத் ரெயிலை இயக்க முடியும். இதற்காக நெல்லை ரெயில் நிலைய சந்திப்பில் பிட் லைனை அமைப்பதற்கான அனுமதியை தெற்கு ரெயில்வே நிர்வாகம் அளித்துள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னர் தான் எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை முழுமையாக இயக்க முடியும்.
இதற்கிடையில் எழும்பூரில் இருந்து நெல்லை என்பதை கன்னியாகுமரி வரை இயக்கும் வகையில் இதன் வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதவிர, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-விஜயவாடா இடையே ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரெயில் சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இவை 2-ம் தலைமுறையை சேர்ந்த மினி வந்தே பாரத் 2.0 எக்ஸ்பிரஸ் ரெயில் வகையை சேர்ந்தது. அதில் 7 ஏசி சேர் காரும், ஒரு பெட்டி எக்ஸிகியூடிவ் சேர் காரும் என 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.
சென்னை எழும்பூரில் புறப்பட்டு நெல்லை செல்லும் வழித்தடத்தில் திருச்சி, மதுரை, விருதுநகர் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையின் 3-வது முனையமாகவும், தினசரி 3 லட்சம் பயணிகள் கையாளப்படும் தாம்பரத்திலும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக இருக்கிறது.
நெல்லைக்கு இயக்குவது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வரவில்லை. இதுதவிர சென்னை-ரேணிகுண்டா வழியாக திருப்பதிக்கு குறுகிய தூரத்திற்கு ஒரு வந்தே பாரத் ரெயில் சேவையை கொண்டு வர இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. படுக்கை வசதிகள் உடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள், ஏசி அல்லாத சாதாரண வந்தே பாரத் ரெயில்கள் உள்ளிட்டவையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.