சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை!
வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், உள்மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடிமின்னலுடன் மழை பெய்து வருகிறது.
சென்னையில் அண்ணாசாலை, பாரிமுனை, மெரினா, எழும்பூர் தி.நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணத்தால் அவதி அடைந்த சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே சென்னையில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை தொடரும் என்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.