சென்னை உயர் நீதிமன்றம் திறப்பது குறித்து தலைமை நீதிபதி விளக்கம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை, ஐகோர்ட்டு வக்கீல் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.சுதா, செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பெண் வக்கீல் சங்கத்தலைவர் லூயிசால் ரமேஷ் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது தலைமை நீதிபதியிடம், அவர்கள், ‘காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும்போது, தொழில்நுட்ப ரீதியாக பல பிரச்சினைகளை வக்கீல்கள் சந்திக்கின்றனர்.

எனவே ஐகோர்ட்டு திறக்கும் வரை இறுதி விசாரணைக்கு வழக்குகளை பட்டியலிடக்கூடாது. வக்கீல்கள் காணொலி காட்சியில் ஆஜராகவில்லை என்ற காரணத்துக்காக வழக்குகளை தள்ளுபடி செய்யக்கூடாது. வாய்தாவும் வழங்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும், ‘குற்ற வழக்குகளில் போலீசார் தேடும் நபரால் மாஜிஸ்திரேட்டு முன்பு சரணடைய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே அதற்காக சென்னையில் ஒரு மாஜிஸ்திரேட்டை ஒதுக்கவேண்டும். ஐகோர்ட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறக்காததால், வக்கீல்கள் வருமானம் இழந்துள்ளனர். எனவே அனைத்து நீதிமன்றங்களையும் உடனடியாக திறக்கவேண்டும்” என்ற வேண்டுகோளையும் முன்வைத்தனர்.

அதற்கு தலைமை நீதிபதி, “தற்போது ஐகோர்ட்டு திறக்க முடியாது. கொரோனா தொற்று ஒழிந்து, பொதுமக்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னரே ஐகோர்ட்டு உள்ளிட்ட நீதிமன்றங்களை திறக்க முடியும்” என்று விளக்கம் அளித்ததாக வக்கீல் சங்க பிரதிநிதிகள் கூறினர்.

‘சரணடையும் குற்றவாளிகளை சிறையில் அடைக்க சென்னையில் ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு பணி ஒதுக்கப்படும்’ என்று தலைமை நீதிபதி உத்தரவாதம் அளித்ததாகவும் அவர்கள் கூறினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools