X

சென்னை அரசு மருத்துவமனையில் 2வது நாளாக மத்திய குழு ஆய்வு

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை டாக்டர் வினிதா, டாக்டர்கள் பர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்பாபு ஆகியோர் அடங்கிய இந்த குழுவினர் சென்னையில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர்.

அதன்பிறகு மத்திய குழுவினர் சென்னை விமான நிலையத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டனர். கூடுவாஞ்சேரி சென்று நந்திவரம் ஆரம்ப சுகாதார மையத்தையும் பார்வையிட்டனர்.

இன்று மத்திய குழுவினர் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிக்கும் உற்பத்தி கலனை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து ஒமைக்ரான் சிறப்பு வார்டையும் பார்வையிட்டனர்.

இதன் பிறகு ஒமந்தூர் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வழங்கும் சிகிச்சை முறைகுறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

கொரோனா நோயாளிகளுக்காக எவ்வளவு படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. என்பதையும் கேட்டறிந்தனர்.

நைஜீரியாவில் இருந்து வந்தவர் மூலம் ஒமைக்ரான் தொற்று வளசரவாக்கம் பகுதியில் அதிகம் பேருக்கு பரவியதால் மத்திய குழுவினர் அங்கு சென்றும் பார்வையிட முடிவு செய்துள்ளனர்.

நாளையும் இந்த குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.