சென்னையில் 75 இடங்களில் ஓ.ஆர்.எஸ் கரைசல் விநியோகம் – சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர் கொள்ளும் வகையில் பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செய்யபட்டுள்ள ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற நலவாாழ்வு மையங்கள், 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது.
மேலும் சுகாதாரப் பணி யாளர்கள் மூலம் 75 பொது இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இன்று (திங்கட் கிழமை) முதல் வழங்கப்படுகிறது. கோடை வெயிலில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபப்படுகிறது. தேவையின் அடிப்படையில் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 2.96 லட்சம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன. எனவே அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் திறந்த இடங்களில் பணியாற்றுவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.