Tamilசெய்திகள்

சென்னையில் 38 பெரிய பாலங்கள் மூடப்பட்டன – முக்கிய சாலைகளுக்கு சீல்

சென்னையில் இன்று முழு ஊரடங்கையொட்டி 312 இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முன்களப்பணியாளர்களான டாக்டர்கள், வருவாய் துறையினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிகளை மேற்கொள்ள தடையின்றி அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் 38 பெரிய பாலங்கள் நேற்று இரவில் மூடப்பட்டன. இன்று காலையிலும் அந்த பாலங்களில் போக்குவரத்து நடைபெறாத வகையில் தடுப்புகளை போலீசார் அமைத்து இருந்தனர். இதற்கு முன்பு ஊரடங்கு காலங்களில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் நடத்தி உள்ளனர். அதனை தவிர்ப்பதற்காகவே போலீசார் பாலங்களில் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர்.

சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டது போன்று காணப்பட்டது. அண்ணா சாலைக்குள் நுழைவதற்கு இருபுறமும் பல சிறிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அண்ணாசாலையிலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணித்தனர்.

வேப்பேரி ரித்தர்டன் சாலை, புரசைவாக்கம் டானா தெரு ஆகியவற்றில் இரும்பு தடுப்புகளை வைத்து யாரும் செல்ல முடியாத அளவுக்கு கட்டி வைத்திருந்தனர். இப்படி சென்னை மாநகர் முழுவதும் சாலைகள் மூடப்பட்டு இருந்ததால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டவர்களும் சுற்றியே தங்கள் இடங்களுக்கு செல்ல முடிந்தது.

இந்த கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் நாளை காலை வரை நீடிக்கும் என்ப தால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.