X

சென்னையில் ஹெல்மெட் அணியாத 40 ஆயிரம் பேரிடம் ரூ.40 லட்சம் அபராதம் வசூல்

சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி முதல் போக்குவரத்து போலீசார் மீண்டும் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தனர்.

இதன்படி தினமும் அபராதம் விதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18 ஆயிரத்து 35 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களிடம் இருந்து ரூ.21 லட்சத்து 98 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பின்னால் அமர்ந்து சென்றவர்களிடம் ரூ.18 லட்சத்து 3 அயிரத்து 500 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் வரையில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வாகன விதிமீறல் வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் இருந்து தொடர்ந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 10 அழைப்பு மையங்கள் அமைத்து போலீசார், போனில் தொடர்பு கொண்டு பேசி அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன்படி கடந்த 50 நாட்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 66 பேர் பழைய வழக்குகளுக்கான (மார்ச் 2019 முதல் பதியப்பட்ட பழைய வழக்குகள்) அபராதத் தொகையாக 1 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரத்து 970 ரூபாய் விதி மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

இதில் 67 வாகன ஓட்டிகள் 100க்கும் அதிகமான விதி மீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தி உள்ளனர். ஒரே வாகன ஓட்டி அவருடைய ஒரே வாகனத்திற்காக 274 விதிமீறல்களில் ஈடுபட்ட அபராதம் செலுத்தி உள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிய 1181 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. 1 கோடியே 19 லட்சத்து 12 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில் பெரும்பாலனோர் சராசரியாக ரூ.10000 அபராதம் செலுத்தி இருக்கிறார்கள்.

மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 247 பழைய வழக்குகளில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 87 ஆயிரத்து 920 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் புதிய வழக்குகளுக்காக ரூ. 3 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 800 அபராதமாக வசூலித்துள்ளனர்.

சென்னை போலீசார் கடந்த 50 நாட்களில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 284 வழக்குகளில் ரூ.6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 770 அபராத தொகையாக வசூலித்து உள்ளனர்.