X

சென்னையில் வேகமாக பரவும் இன்புளுயன்சா ஏ வகை காய்ச்சல்

சென்னையை பொறுத்தவரை மழைக்கால நோய்கள் ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் ஜனவரி வரை இருக்கும். இதில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த நோய் பரவல் உச்சத்தில் இருக்கும். இந்த வருடமும் காய்ச்சல் பெருமளவு காணப்படுகிறது. பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த காலங்களில் வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல் ஆகியவை வழக்கமாக பரவும். இந்த ஆண்டும் அதேபோல் காய்ச்சல்கள் பரவி வருகின்றன.

இது பற்றி ஆய்வு செய்வதற்காக ஒரு அரசு மற்றும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 300 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் இன்புளுயன்சா காய்ச்சல் அதிக அளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்புளுயன்சா-ஏ வகை காய்ச்சல் தான் அதிகமான அளவில் இருக்கிறது. இந்த வகை காய்ச்சல் கண்டவர்களுக்கு உடல் வலி, அதிகமான காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

காய்ச்சல் அதிகரிப்பதை பொறுத்து இவற்றை 3 பிரிவுகளாக பிரிக்கப்படும். லேசான காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் அவை சாதாரண முறையில் சிகிச்சை அளிக்கப்படும். இதே காய்ச்சல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகளை தாக்கினால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதே நேரம் அளவுக்கு அதிகமான காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் வாந்தி போன்றவை இருந்தால் அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து நேரிடவும் வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

காய்ச்சல் பாதித்தவர்கள் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். மேலும் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டது. எனவே இந்த சீசனில் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். லேசான காய்ச்சல் கண்டால் ஒன்றிரண்டு நாட்கள் பார்த்து விட்டு காய்ச்சல் குறையவில்லை எனில் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது என்கிறார்கள் சுகாதாரத்துறையினர்.

Tags: tamil news