தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதே நேரத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 23-ந்தேதி முழு தளர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றே பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்து கொண்டனர்.
ஆனாலும் காய்கறிகள், பழங்கள் போன்றவை அவ்வப்போது தேவைப்படும் என்பதால் அவற்றை தெருக்களில் கொண்டு சென்று விற்பதற்கு விசேஷ அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி சான்றிதழ்களை வழங்கியது. அதன்மூலம் வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வீதி வீதியாக சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வருகிற 1-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை மேலும் முழு ஊரடங்கு நீடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஏற்கனவே வாங்கி வைத்துள்ள மளிகை பொருட்கள் தீர்ந்து இருக்கும் என்பதால் மளிகை பொருட்களையும் வீடு வீடாக கொண்டு சென்று விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் சென்னை நகரில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 7500 வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு மற்றும் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.
அவற்றை மாநகராட்சி மண்டல அலுவலகம், வருவாய் அலுவலகம், வார்டு அலுவலகம் போன்றவற்றில் வழங்கினார்கள். மேலும் வியாபாரிகள் சங்கம் மூலமாகவும் அனுமதி டோக்கன் வழங்கப்பட்டன.
அவற்றை ஆர்வத்துடன் வியாபாரிகள் பெற்று சென்றனர். நேற்று மாலை வரை 2,197 வியாபாரிகள் அனுமதி பெற்று இருந்தனர். அதன்படி அவர்கள் பொருட்களை சிறிய வேன்கள், 3 சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றில் ஏற்றி வீதி வீதியாக கொண்டு சென்று இன்று (திங்கட்கிழமை) விற்பனை செய்தனர்.
அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றார்கள். பொருட்களை வாங்க வருபவர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி பொதுமக்கள் நடந்து கொண்டனர்.
மற்ற நாட்களில் பொதுமக்கள் கடைகளை தேடிச் சென்று பொருட்களை வாங்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று வீட்டுக்கே பொருட்கள் நேரடியாக வந்ததால் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
வீதிகளில் வந்த நடமாடும் கடைகளில் ஏராளமானோர் பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் வேகமாக விற்று தீர்ந்தன. உடனே தங்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை கொண்டு வந்தனர்.
ஒவ்வொரு தெருவிலும் வரும் நடமாடும் கடைகள் தொடர்பாக மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணைய தளத்தில் தகவல் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. தெருக்களுக்கு வரும் வியாபாரிகளின் போன் எண்களும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தன. அவற்றை தொடர்பு கொண்டும் மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.