சென்னையில் ரூ.172 கோடி மதிப்பீட்டில் 1,110 சாலைகள் புதுப்பிக்கப்படுகிறது
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில் நகரின் உட்புற மற்றும் பஸ் வழித்தட சாலைகள் மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கியது. சென்னையில் ரூ.172 கோடி மதிப்பீட்டில் 1,110 சாலைகள் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவு நேரங்களில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு மற்றும் சேமிப்பு நிதியின் கீழ் 125 கி.மீ.க்கு ரூ.68.70 கோடியும், சிங்கார சென்னையின் கீழ் 101 கி.மீ சாலைகளை போடுவதற்கு ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
முதன்மை செயலாளரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங்பேடி தலைமையில் இப்பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலை இரவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
சாலைகள் சீரமைப்பு பணிகளின் போது இடையூறு ஏற்படாமல் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உரிய தடுப்புகளை அமைத்து, பணியின் போது போக்குவரத்தை திருப்பி விட வேண்டும். “கான்கிரீட் கலவையில் ஒட்டுதல் சரிபார்க்கப்பட வேண்டும், மேலும் கலவையின் வெப்பநிலை 140 முதல் 160 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தேனாம்பேட்டை மண்டலம் வள்ளுவர் கோட்டம் பிரதான சாலைப் பணிகளை மேயர் பிரியா, தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.