Tamilசெய்திகள்

சென்னையில் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு! – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக சென்னையில் மிக குறைந்த அளவிலேயே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னையில் மின்சார ரெயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை புறநகர் மின்சார ரெயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் ரெயில்வே, சுகாதாரம், நீதி மன்றம், தூய்மை பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவன ஊழியர்கள், துறைமுகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே மின்சார ரெயில்களில் பயணித்து வருகின்றனர்.

ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் மின்சார ரெயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டு 279 மின்சார ரெயில்கள் இயக்கப்படும். சென்னை-திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்தில் 48 ரெயில்களும், திருவள்ளூர், அரக்கோணம்-சென்னை மார்க்கத்தில் 49 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

சென்னை-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 24 ரெயில்களும், கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை-சென்னை 24 ரெயில்களும், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 12 ரெயில்களும், வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே 17 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 44 ரெயில்களும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர்- சென்னை கடற்கரை மார்க்கத்தில் 44 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ இடையே 2 ரெயில்களும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ-ஆவடி, பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ இடையே 4 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் ஞாயிறு கால அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கையொட்டி கடந்த 31-ந்தேதி முதல் நேற்று வரை 208 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் 279 ரெயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.